ஐபிஎல் தொடரில் இன்று (மே, 13) லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்டன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்கரம் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. 


183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதல் தடுமாறி வந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் கேயல் மேயர்ஸ் தான் சந்தித்தித்த முதல் 10 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தொடர்ந்து தடுமாறி வந்த அவர் 14 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். அதன் பின்னரும் லக்னோ அணியால் ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சினால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்து இருந்தது. மீதமுள்ள 10 ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவை என இருந்தது. 


களத்தில் இருந்த மன்கட் மற்றும் ஸ்டாய்னஸ் இருவரும் நிதான ஆட்டத்தினையே கடைபிடித்தனர். கிடைத்த பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். 13. 4வது ஓவரில் தான் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிவந்த மன்கட் 35 பந்தில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தினை எட்டினார். அதன் பின்னர் 16வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விரட்டிய ஸ்டாய்னஸ் மூன்றாவது பந்தில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களத்துக்கு வந்த பூரான் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் விளாசினார். 


இதனால் லக்னோ அணி இலக்கை நோக்கி கிடுகிடுவென நெருங்கியது. கடைசி 3 ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் மட்டுமே தேவை என இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பூரன் மற்றும் மன்கட் லக்னோ அணியின் வெற்றியை எளிதாக்கினர். இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவரில் 185 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.