காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும் என்று ஒரு வசனம் கேஜிஎப்-இல் வரும். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் இம்பாக்ட் பிளேயராக வந்து அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்துவதற்கு முன்பு, இளம் வீரர் சுயாஷ் ஷர்மா பல அடிகளை பட்டு அந்த நிலையில் தான் இருந்துள்ளார். U-19 அணி தேர்வில் நிராகரிக்கப்பட்ட அவர் மீண்டு வந்து இந்த கம்பேக்கை கொடுத்துள்ளார்.


சுயாஷ் ஷர்மா


ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் பெரும் கண்டுபிடிப்பு, இந்த சுயாஷ். விராட் கோலி தனது ஆக்ஷனை காண்பித்து கொண்டிருக்கும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெற்றியை பெற்றுத்தந்த இளம் இந்திய பந்துவீச்சாளர் சுயாஷ் ஷர்மா.


19 வயதான அவர் அந்த போட்டியில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு நேர்காணலில் ஐபிஎல் பேசிய அவர்,19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில், தேர்ந்தெடுக்கப்படாததைக் குறித்து பேசினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும், வீடு திரும்பிய பிறகு மொட்டையடித்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.



தேர்வாகாததால் மொட்டை அடித்தேன்


அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு நான் U-19 க்கு ட்ரையல்களை அளித்தபோது சிறப்பாக செயல்பட்டேன்," என்று சுயாஷ் IPL போட்டி முடிந்த பின்னர் எடுக்கப்பட நேர்காணலில் கூறினார், "12:30 மணி முதல் 1 மணி வரை, அதற்கான ஒரு பட்டியலை வெளியிட்டனர், ஆனால் நான் அப்போது தூங்கிக் கொண்டிருந்தேன். சுமார் 3 மணிக்கு எழுந்து பார்த்தபோதுதான் எனக்கு தெரியும், நான் தேர்வுசெய்யப்படவில்லை என்று. இரண்டு மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். அவர்கள் ஒருமுறை நான் பந்து வீசுவதைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள், நான் அங்கு சென்றேன், ஆனால் அவர்கள் என்னை சேர்க்க முடியாது என்று சொன்னார்கள், நான் அழுதுகொண்டே திரும்பி, வீட்டிற்கு வந்து மொட்டையடித்து கொண்டேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தேன். நன்றாக பந்து வீசியும் தேர்வாக முடியவில்லை," என்று சுயாஷ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: CSK vs KKR Tickets: சேப்பாக்கத்தில் சென்னை அணியின் கடைசி லீக் போட்டி..! தொடங்கியது டிக்கெட் விற்பனை..! அலைமோதும் ரசிகர்கள்..!


இம்பாக்ட் வீரர்


இந்த சீசனின் தொடக்கத்தில் ஐபிஎல் அறிமுகமக கேகேஆர் நட்சத்திரம் வெங்கடேஷ் ஐயருக்கு மாற்றாக இம்பாக்ட் வீரராக களம் கண்ட அவர், ஆர்சிபிக்கு எதிரான தனது முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் (9), அனுஜ் ராவத் (1), கர்ண் ஷர்மா (1) ஆகியோரை சுயாஷ் வீழ்த்தினார். அதன் பின்னர் தொடர்ந்து அதே போன்ற செயல்முறையை வெளிப்படுத்தி, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தார். இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால், அவர் தனது ஐபிஎல் அறிமுகத்திற்கு முன்பு எந்த ஒரு தொழில்முறை போட்டியிலும் இடம்பெறவில்லை என்பதுதான்.



திறமையும் முடியும் சேர்ந்து வளர்ந்தது


“என்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதாக நான் சபதம் செய்தேன், அதனால் ஒரு நாள், அவர்களே என்னை அழைப்பார்கள். பின்னர் முடியும் மெதுவாக மீண்டும் வளர ஆரம்பித்தது. எனது திறமையும் வளர்ந்தது. அதனால் நான் முடியையும் வெட்டாமல், வளர அனுமதிக்க முடிவு செய்தேன். அது எனக்கு பொருந்துவதால் அப்படியே வைத்துவிட்டேன்" என்று சுயாஷ் மேலும் கூறினார். லெக்-ஸ்பின்னரான சுயாஷ் இந்த ஆண்டு தான் ஆடிய 9 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெரும்பாலும் இம்பாக்ட் ப்ளேயராக களம் கண்ட அவர், 8 என்ற எகானமி விகிதத்தில் பந்து வீசி வருகிறார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் எல்லா பந்து வீச்சாளரையும் அடிதுத்து துவம்சம் செய்தபோதும், KKR இன் ஒரே நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளராக திகழ்ந்து, கூக்லிகள் வீசி அவரது ரன் ஓட்டத்தை தடுத்தார்.