ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 258 ரன்களை லக்னோ அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.


லக்னோ - பஞ்சாப் மோதல்


ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. மொஹாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விலையாடமல் இருந்த பஞ்சாப் கேப்டன் தவான் அணிக்கு திரும்பினார்.


கைல் மேயர்ஸ் அதிரடி:


ப்ரார் வீசிய போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் நழுவவிட்டது. இதையடுத்து போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே கைல் மேயர்ஸ் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசினார். கிடைத்த மறுவாய்ப்பை முறையாக பயன்படுத்ததாக கே.எல். ராகுல் வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய கைல் மேயர்ஸ் பஞ்சாபின் பந்துவீச்சை பஞ்சு பஞ்சாக பறக்காவிட்டர். இதன் மூலம் வெறும் 20 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். தொடர்ந்து 24 பந்துகளில் 54 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.


பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி:


அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், ம்ூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி ரன் ரேட் குறையாமல் ரன் வேட்டையை நடத்தினார். இதனால் 7.4 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. இதனிடையே, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நோ பால்கள் மூலம் ரன்களை வாரி வழங்கினர். இதனால், பதோனி - ஸ்டோஉனிஷ் கூட்டனி 26 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 128 ரன்களை குவித்தது. இந்த கூட்டணி 89 ரன்களை சேர்த்த நிலையில், 43 ரன்கள் எடுத்து இருந்த பதோனி லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


ஸ்டோய்னிஷ் அரைசதம்:


மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஷ் 31 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் நிக்கோலஸ் பூரானும் தனது பங்கிற்கு பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் 16 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 200 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோய்னிஷ் 72 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.  இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும்.


பூரான் அதிரடி:


ஆனாலும் விடாமல் அதிரடி காட்டிய பூரானின் அட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை சேர்த்தது. பூரான் 45 ரன்களை சேர்த்தார். பஞ்சப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் மற்றும் லிவிங்ஸ்டோன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் எட்டுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.