ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மொஹாலியில் நடைபெறும் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.


லக்னோ - பஞ்சாப்:


புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேசமயம் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.


நடப்பு தொடரை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான அணியாகவே உள்ளது. அதேசமயம் அந்த அணி இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பதும், சொற்ப இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவவதும் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணியை சாம்கரண் வழி நடத்த தொடங்கிய பிறகு அந்த அணி வலுப்பெற்றுள்ளது.


லக்னோ பலம், பலவீனம் என்ன?


லக்னோ அணியில் பேட்டிங்கில் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர். கேப்டன் கே.எல்.ராகுல் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் அவரது பழைய அதிரடி பேட்டிங் தற்போது வரை வெளிவராமலே இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும். கடந்த போட்டியில் லக்னோ அணி குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததே இதற்கு உதாரணம்.


பந்துவீச்சில் ஆவேஷ்கான், உனத்கட், மார்க்வுட், கிருஷ்ணப்ப கவுதம், கரண்சர்மா, குருணல்பாண்ட்யா உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும். பஞ்சாப் அணி இந்த தொடரை தொடக்கத்தில் வெற்றிகளுடன் தொடங்கினாலும், இடையே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. ஆனால், அதி,லிருந்து மீண்டு வந்து 4 வெற்றி பெற்று அவர்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக, சாம் கரண் கேப்டன்சிக்கு பிறகு பஞ்சாப் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


பஞ்சாப் பலம் - பலவீனம்:


பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரப்சிம்ரன்சிங், ஷார்ட் நல்ல தொடக்கமாக இருந்து வருகின்றனர். ஹர்பிரீத்சிங் பாட்டியாவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஜிதேஷ் சர்மா, ஷாரூக்கான் அதிரடியில் மிரட்டுகின்றனர். கேப்டன் சாம்கரண் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இதனால், இறுதிக்கட்டத்தில் பஞ்சாப் ரன் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் சாம்கரண், ரபாடா, நாதல் எல்லீஸ், ராகுல் சாஹர் இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம். காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விளையாடாத தவான், இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.