எம்.எஸ். தோனி அதிவேக ஸ்டம்பிங் செய்வதில் மாஸ்டர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில்லை அதிவேக ஸ்டம்பிங்கின் மூலம் தோனி வெளியேற்றினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இன்றாவது போட்டி நடைபெறுமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் போடப்பட்டது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா களமிறங்கினர்.
சுப்மன் கில் கொடுத்த இரண்டு கேட்சுகளை தவறவிட்டு அதிர்ச்சி அளித்தார் தீபக் சாஹர். இதன் மூலம் குஜராத் அணியின் தொடக்க ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட தொடங்கியது. 6.5 ஓவர்களில் இந்த ஜோடி 67 ரன்கள் குவிக்க, 6.6 வது பந்தை ஜடேஜா வீசினார். அப்போது இறங்கி வந்து அடிக்க கில் முயற்சிக்கும்போது பந்தை தவறவிட, அதை லாபகமாக பிடித்து தோனி ஸ்டம்பிங் செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனியின் 250வது போட்டி:
இந்த இறுதிப் போட்டி தோனியின் 250வது போட்டியாகும். இதன்மூலம் 250வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் ஆனார். இவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 243 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 242 போட்டிகளிலும் 2 மற்றும் 3 வது இடங்களிலும், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா முறையே 237 மற்றும் 226 போட்டிகளில் விளையாடி 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.
தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 39.09 சராசரியில் 5082 ரன்களை குவித்துள்ளார். மேலும், அதிக விக்கெட்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் 178 (137 கேட்சுகள் மற்றும் 41 ஸ்டம்பிங்) முதலிடத்தில் உள்ளார். 226 போட்டிகளில் தனது அணிகளை வழிநடத்தி, ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக விளையாடியவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 158 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.