அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று- மே 28) பெய்த கனமழையால் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டி தடைப்பட்டது. இதனால், யார் சாம்பியன் என்பதை அறிய இன்று (மே 29) ரிசர்வ் நாளில் இந்த இறுதிப்போட்டி மாற்றப்பட்டது. 


இந்தநிலையில் நேற்று மழை வெளுத்து வாங்கியபோது உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கபடும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் கூரையில் இருந்து மழை நீர் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. இதன் காரணமாக அந்த ஸ்டாண்டில் போட்டியை பார்க்க சென்றிருந்த ரசிகர்கள் நனைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பினர்.  






இறுதிப்போட்டியில் சென்னை - குஜராத்:


இந்தியன் பிரிமீயர் லீக் 2023 இறுதிப்போட்டி ரிசர்வ் டே-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 1 ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. 


இதையடுத்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


பிட்ச் அறிக்கை: 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்டிங்கிற்கு சிறந்த பிட்சாகவே உள்ளது. இங்கு விளையாடிய ஏழு போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாகவே 187 ஆக உள்ளது. மேலும், முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி மூன்று முறையும் வெற்றிபெற்றுள்ளது. 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒருமுறை மட்டுமே நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது. 


ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியும் இங்கே தானாம்..


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியையும் இங்குதான் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இந்த ஸ்டேடியம் 1.32 லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் வசதிகொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தின் ஒன்றாக உள்ளது.