ஐபிஎல் 16வது சீசனானது கிட்டத்தட்ட இறுதி நிலையை தொட்டுவிட்டது. இன்று மழை, வெயில், புயல், சுனாமி என எது வந்தாலும் சரி, வரவிட்டாலும் சரி யாருக்கு கோப்பை என்று தெரிந்துவிடும். 


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. விடாமல் பெய்த கனமழையால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு, இறுதிப்போட்டியானது இன்று மாற்றப்பட்டது. மழை இல்லையென்றால் போட்டி நடத்தப்பட்டு ஏதாவது ஒரு அணி கோப்பையை வெல்லும். மழை பெய்து போட்டி தடை பட்டால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும். 


இப்படியான சூழலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில்தான் ஆரஞ்சு கோப்பை வின்னர் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உள்பட 851 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஃபாப் டு பிளெசிஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 14 போட்டிகளில் விளையாடி 730 ரன்கள் குவித்துள்ளார். 


விராட் கோலி 14 போட்டிகளில் 639 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்துள்ளார். டெவோன் கான்வே ஐந்தாவது இடத்தில் உள்ளார். 15 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்துள்ளார்.


இந்தநிலையில், சுப்மன் கில் இன்றைய போட்டி முடிவுக்கு பிறகு ஆரஞ்சு கோப்பையை வெல்வதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை படைப்பார். தற்போது வரை ஆரஞ்சு கேப்பை சுப்மன் கில்லிடம் உள்ளது. இறுதிப்போட்டிக்கு பிறகே இதற்கான பரிசுத் தொகை வழங்கப்படும். 


முன்னதாக, ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த வயதில் ஆரஞ்சு கேப்பை வென்றவர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்திருந்தார். இவர் இந்த சாதனையை 24 வயது 257 நாட்களில் தனதாக்கினார். தற்போது சுப்மன் கில்லுக்கு 23 வயது 263 நாட்களே ஆகியுள்ளது. 


தற்போதைய சாதனை படி, இந்தப் பட்டியலில் ஷான் மார்ஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 2008 இல் இந்த பட்டத்தை வென்றார். விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 27 வயது 206 நாட்களில் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.


ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர்கள் பட்டியல்: 



  • 23 ஆண்டுகள் 263 நாட்கள் - சுப்மன் கில் (2023)

  • 24 ஆண்டுகள் 257 நாட்கள் - ருதுராஜ் கெய்க்வாட் (2021)

  • 24 ஆண்டுகள் 328 நாட்கள் - ஷான் மார்ஷ் (2008)

  • 27 ஆண்டுகள் 206 நாட்கள் - விராட் கோலி (2016)

  • 27 ஆண்டுகள் 292 நாட்கள் - கேன் வில்லியம்சன் (2018) 


ALSO READ | Sudhakar: 'கிழக்கே போகும் ரயில்' நாயகன்... 80களின் பிரபல நடிகர்... சுதாகர் உடல்நிலை எப்படி இருக்கு? அவரே கொடுத்த விளக்கம்!