ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், பெங்களூரு அணியின் தோல்வியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களிலும், தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். 70 லீக் போட்டிகளும் நடந்த முடிந்ததை தொடர்ந்து, ஒரு வழியாக பிளே-ஆஃப் சுற்றில் விளையாட உள்ள 4 அணிகள் எவை என்பது கடைசி லீக் போட்டி மூலம் உறுதியாகியுள்ளது.

மும்பை இன் - ஆர்சிபி அவுட்:

வான்கடே  மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 200 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

இதனால் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேற தனது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் எனும் நெருக்கடியில், குஜராத் அணிக்கு எதிராக பெங்களூரு அணி களமிறங்கியது. ஆனால், கோலியின் அபார சதத்துடன் அந்த அணி நிர்ணயித்த 198 ரன்கள் என்ற இலக்கை, குஜராத் அணி 19.1 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இதனால், நடப்பு தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறியது. மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறியது.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி  தோல்வி புள்ளிகள்
குஜராத் 14 10 4 20
சென்னை 14 8 5 17
லக்னோ 14 8 5 17
மும்பை 14 8 6 16
ராஜஸ்தான் 14 7 7 14
பெங்களூரு 14 7 7 13
கொல்கத்தா 14 6 8 12
பஞ்சாப் 14 6 8 12
டெல்லி 14 5 9 10
ஐதராபாத் 14 4 10 8

பிளே-ஆப் சுற்றில் நுழைந்த 4 அணிகள்:

லீக் போட்டிகளின் முடிவில் 10 போட்டிகளில் வெற்றி பெற்ற குஜராத் அணி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறியது. சென்னை அணி டெல்லி அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியிலும், லக்னோ அணி கொல்கத்தா அணிக்கு எதிரான தனது கடைசி லீக்  போட்டியிலும் வென்று பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றது. அதைதொடர்ந்து, தனது கடைசி லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றதோடு, பெங்களூரு அணியின் தோல்வியின் மூலம் நான்காது அணியாக பிளே-ஆஃப் சுற்றிற்கு நுழைந்தது மும்பை அணி.

மற்ற அணிகளின் நிலை:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள், தலா 7 வெற்றிகளுடன் 5 மற்றும் 6வது இடத்தில் நீடிக்கிறது. அதேபொன்று, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 வெற்றியுடன் 7 மற்றும் 8வது இடத்தை பிடித்தன. டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள், முறையே 5 மற்றும் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டன.