IPL 2023, RCB vs GT: விறுவிறுப்பான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றது. இதில் 70வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்புச் சாம்பியன்  குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டி நடைபெறும் சின்னச்சாமி மைதானத்தில் இன்று மதியம் முதல் மழை பெய்து வந்ததால் போட்டி நடைபெறுமா நடக்காதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில், போட்டி மழையால் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணி பேட்டிங்கைத் தொடங்கியது. மழையால் பெங்களூரு அணிக்கு இந்த ஆடுகளம் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் பெங்களூரு அணி சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் இந்நிலையில், விராட் கோலி மட்டும் சிறப்பாக ஆடி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தார். 35 பந்தில் தனது அரைசதத்தினை எட்டிய அவர் அடுத்த 25 பந்தில் ஐபிஎல் தொடரில் தனது 7வது சதத்தினை எட்டினார். இதனால் பெங்களூரு அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி பவர்ப்ளேவில் விரத்திமான் சஹா தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின்னர் இம்பேக்ட் ப்ளேயராக வந்த விஜய் சங்கர், தொடக்க வீரரான சுப்மன் கில்லுடன் இணைந்து பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தார். இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதங்களை விளாசினர். இருவரும் இணைந்து 71 பந்தில் 123 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. விஜய் சங்கர் தனது அரைசதத்தினை கடந்ததும் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷனாகாவும் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேற, போட்டி பெங்களூரு கரங்களுக்கு வருவதுபோல் இருந்தது. 


அடுத்து களமிறங்கிய மில்லரும் 6 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.  இறுதி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சுப்மன் கில் 98 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். முதல் பந்து நோ-பாலாக வீச, அதற்கு போடப்பட்ட ரீ-பால் வைடாக வீசப்பட்டது.  மீண்டும் வீசப்பட்ட ஃப்ரீ கிட் பந்தை கில் சிக்ஸருக்கு விளாசி அணியை வெற்றி பெறச்செய்ததுடன் தனது சதத்தினை எட்டினார். 


இந்த இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 198 ரன்களை எட்டி பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணி சார்பில் விராட் கோலியும் குஜராத் அணி சார்பில் சுப்மன் கில்லும் சதம் விளாசினர்.