ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இந்த போட்டி டாஸ் போட்டு தாமதமாக தொடங்கியது. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், லிட்டன் தாஸ் களமிறங்கினர். லிட்டன் தாஸ் ஐபிஎல் தொடரில் இந்த போட்டியின் மூலம் முதல் முறையாக களமிறங்கினார். 


பெரிதும் எதிர்பார்க்கப்பட லிட்டன் தாஸ் 4 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்து முகேஷ் குமார் பந்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து உள்ளே வந்த வெங்கடேஷ் ஐயரும் ரன் ஏதுவுமின்றி வெளியேறினார்.( கடந்த போட்டியில் சதம் அடித்தார்)


பின் வரிசை வீரர்களாக களமிறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா 4 ரன்கள், ரிங்கு சிங் 6 ரன்கள், சுனில் நரைன் 4 ரன்கள் என தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் மூலம், கொல்கத்தா அணி 13 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. 


ஒரு புறம் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் போராடி 43 ரன்கள் எடுத்து, 43 ரன்களில் குல்தீப் பந்தில் கவிழ்ந்தார். அப்போது கொல்கத்தா அணி 93 ரன்கள் எடுத்திருந்தது. வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த அனுகூல் ராய், தான் சந்தித்த முதல் பந்தே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


அடுத்ததாக உள்ளே வந்த உமேஷ் யாதவும் 3 ரன்களில் தனது விக்கெட்டை தாரை வார்க்க, கடைசி ஓவர் வரை நின்ற ரஸல், முகேஷ் குமார் வீசிய 20வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்கள் முயற்சி செய்தபோது வருண் சக்கரவர்த்தி தனது விக்கெட்டை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. 


டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, நோர்கியா, அக்ஸார் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், முகேஷ் குமார் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.