Kane Williamson injury: பந்தை தாவிப்பிடித்த போது காயம்.. நிற்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய வில்லியம்சன்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்தார்.

Continues below advertisement

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்தார். வலது காலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிக்கு ஆளான வில்லியம்சன், சக வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

Continues below advertisement

சென்னை - குஜராத் அணிகள் மோதல்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரரான கெய்க்வாட் சிறப்பான அடித்தளம் அமைத்து தந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் கடந்தார்.

வில்லியம்சன் காயம்:

கெய்க்வாட் 71 ரன்களை சேர்த்து இருந்த போது, 13வது ஓவரை ஜோஸ்வா லிட்டில் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கெய்க்வாட் தூக்கி அடிக்க, பவுண்டரி கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் காற்றில் பறந்து பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், நிலை தடுமாறி பவுண்டரி கோட்டிற்குள் விழுந்துவிடுவோம் என உணர்ந்த வில்லியம்சன், கீழே விழுவதற்கு முன்பாகவே பந்தை பவுண்டரி கோட்டிற்கு வெளியே வீசினார். தொடர்ந்து, கீழே விழுந்தபோது அவரது வலது காலில், வில்லியம்சனின் மொத்த எடையும் தாங்கியதால் அவர் வலியால் கடும் அவதிக்கு ஆளாகினார். தனது மூட்டை பிடித்து வலியால் கடுமையாக தவித்தார். தொடர்ந்து, குஜராத் அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் வந்து வில்லியம்சனை தாங்கி பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த முடிவுகளின் அடிப்படையில் தான், இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் பேட்டிங் விளையாடுவரா, இல்லையா என்பது தெரிய வரும்.

ஐபிஎல் தொடரில் வில்லியம்சன்:

கடந்த 8 ஆண்டுகளாக ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த வில்லியம்சனை, கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் அடிப்படை ஏலத்தொகையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. இந்நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே அவர் காயமடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 2,101 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும்.

178 ரன்கள் குவித்த சென்னை அணி: 

இதனிடயே, வில்லியம்சன் தூக்கி எறிந்த பந்து பவுண்டரி கோட்டை தொட்டது. இதனால், வில்லியம்சனால் குஜராத் அணிக்கு 2 ரன்களை மட்டுமே குறைக்க முடிந்தது. இதனிடையே, அதிரடியாக விளையாடிய  ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 9 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 92 ரன்களை சேர்த்தார். அவரை தொடர்ந்து  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது.

Continues below advertisement