நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு தேர்வு செய்தது.
16வது சீசன் ஐபிஎல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு தேர்வு செய்தது
குஜராத் அணி விவரம்:
ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி, அதே உத்வேகத்துடன் முதல் போட்டியிலேயே களமிறங்கியுள்ளது. டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், ராகுல் திவேதியா மற்றும் ஸ்ரீகர் பரத் ஆகிய அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பிட்ட வீரர்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், குஜராத் அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது. பந்துவீச்சிலும் சற்றும் சளைக்காத அந்த அணி ரஷித் கான், ஷமி போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதோடு, முதல் போட்டி உள்ளூர் மைதானத்தில் நடைபெறுவது குஜராத் அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
சென்னை அணி விவரம்:
ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தோனி தலைமையில் களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு இந்த அணி 14 போட்டிகளில் விளையாடி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், தோனிக்கு இது கடைசி தொடர் என கூறப்படுவதால், இந்த ஆண்டு சென்னை கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.
பேட்டிங்கை பொறுத்தவரை தோனி, அம்பத்தி ராயுடு, கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் கான்வே ஆகியோர் உள்ளனர். இதேபோன்று முக்கிய பந்துவீச்சாளர்களாக ஜடேஜா, தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
நேருக்கு நேர்:
சென்னை மற்றும் குஜராத் அணிகள் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி சேஸ் செய்தது தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மைதான விவரம்:
அகமதாபாத் மைதானத்தில் இதுவரை 10 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 6 முறையும், சேஸ் செய்த அணிகள் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.