Varun Chakravarthy: ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானமான சின்னச்சாமி மைதானத்தில் வீழ்த்தியது. 


இந்த போட்டியில் மேன் ஆஃப் த மேட்ச் விருது கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கப்பட்டது.  அவர் மொத்தம் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து மேக்ஸ் வெல், லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 


மேன் ஆஃப் த மேட்ச் விருதினை பெற்ற பின்னர் அவர் பேசியதாவது,  ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நான் 49 ரன்களை வாரி வழங்கி இருந்தேன். ஆனால் நான் எனது மனவலிமையை விடவில்லை. நான் எனது பந்து வீச்சு முறையில் புதிதாக எதையும் இணைக்க நினைக்கவில்லை. நான் ஏற்கனவே வீசி வருவதில் மிகத் துல்லியமாக வீச முயற்சி செய்தேன். இந்நிலையில், இன்று மேன் ஆஃப் த மேட்ச் விருதினைப் பெற்றுள்ளேன். எனக்கு மகன் பிறந்துள்ளான். நான் எனது மனைவி மற்றும் மகனை இன்னும் பார்க்கவில்லை. அவர்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன். இந்த ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் தான் அவர்களை சந்திக்கவுள்ளேன்” இவ்வாறு வருண் சக்கரவர்த்தி பேசினார்.


வருண் சக்கரவர்த்தி இந்த தகவலை கூறும் வரை இது குறித்து யாரும் அறிந்து இருக்கவில்லை. மகனையும் மனைவியையும் பார்க்கவேண்டும் எனும் ஆவலை அவர் வெளிப்படுத்தியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் பலரும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். 


கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி அப்போது முதல் இப்போது வரை கொல்கத்தா அணிக்காத்தான் விளையாடி வருகிறார். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி ஐபிஎல் தொடரில் அவரது 50வது போட்டியாகும். இந்த தொடரில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வருண் சக்கரவர்த்தியின் இந்த ஆண்டில் இதுவரை சிறப்பான பந்து வீச்சாக இருப்பது, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 


50 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இதுவரை 55 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்து வீச்சாக இருப்பது ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான். இவரது பந்து வீச்சு ஆவ்ரேஜ் 25.64ஆகவும், எக்கானமி 7.36 ஆகவும் உள்ளது.