ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளிலும், எதிரணியுடன் மோதும் போதும் அவர்களது மைதானத்தில் 7 இடத்திலும் விளையாடும். அதன்படி சென்னை, ஹைதராபாத், பெங்களூர், குஜராத், லக்னோ, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால், இந்த போட்டியை காண கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்களை வாங்கி குவித்தனர்.
ஒரு டிக்கெட்டின் அடிப்படை விலை குறைந்தபட்சமாக ரூ. 1500 யிலிருந்து அதிகபட்சமாக 3000 வரை விற்பனை செய்யப்பட்டும், செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டாண்ட் வகை | டிக்கெட் விலைகள் |
---|---|
C/D/E Lower | 1500 |
I/J/K Upper | 2000 |
I/J/K Lower | 2500 |
D/E Upper | 3000 |
இந்தநிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, இந்த போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு ஆஃபர் அளிக்கும் வகையில் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) இணைந்து இன்று போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் இனி வரும் போட்டிகளையும் மெட்ரோவில் இலவசமாக சென்று காணலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “ஐ.பி.எல் போட்டிகளைக் காண சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் எம்.ஏ சிதம்பரம் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஐபிஎல் டிக்கெட்டுகளின் QR பார்கோடுகளை மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து பயனர்கள் இலவசமாகப் பயணிக்கலாம். அதன்படி, போட்டி நடைபெறும் சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்திற்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ வரையில் இலவசமாகப் பயணிக்கலாம். தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்ல மினி பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் வீடு திரும்பவும் அதே ஐபிஎல் டிக்கெட் கொண்டு மினி பஸ் மற்றும் மெட்ரோவில் பயணிக்கலாம். அதேபோல், போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் 90 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.
நேரடி ஒளிபரப்பு :
சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட பழனி, சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ரயில் நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்படும் என்றும், போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் ஏதுமில்லை. சாதாரண மெட்ரோ பயணம் மற்றும் ரயில் நிலையங்களில் தங்கும் கட்டணமாக 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்க மைதானத்தின் போட்டி அட்டவணை:
சேப்பாக்கம் | எதிரணி | நாள் மற்றும் தேதி | உள்ளூர் நேரம் |
---|---|---|---|
சிஎஸ்கே | லக்னோ | 3 ஏப்ரல் 2023 (இன்று) | 07:30 PM |
சிஎஸ்கே | ராஜஸ்தான் | 12 ஏப்ரல் 2023 (புதன்) | 07:30 PM |
சிஎஸ்கே | ஹைதராபாத் | 21 ஏப்ரல் 2023 (வெள்ளி) | 07:30 PM |
சிஎஸ்கே | பஞ்சாப் | 30 ஏப்ரல் 2023 (ஞாயிறு) | 03:30 PM |
சிஎஸ்கே | மும்பை | 6 மே 2023 (சனி) | 03:30 PM |
சிஎஸ்கே | டெல்லி | 10 மே 2023 (புதன்) | 07:30 PM |
சிஎஸ்கே | கொல்கத்தா | 14 மே 2023 ((ஞாயிறு) | 07:30 PM |