ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை அணி கேப்டன் தோனி சொன்ன கருத்து, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அணி அபாரம்:


நடப்பு தொடரின் பிளே-ஆப் சுற்றில் நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 10வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, சென்னை அணியிடம் தோல்வியடைந்த குஜராத், வரும் 26ம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாட உள்ளது.


தோனி ஓய்வு பெறுகிறாரா?


இதனிடையே, நடப்பு தொடருடன் சென்னை அணி கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பல்வேறு தகவல் வெளியானது. இதுதொடர்பாக, இங்கே ( சேப்பாக்கத்தில் ) மீண்டும் வந்து விளையாடுவீர்களா என போட்டிக்கு பிறகு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி நேரடியாக விளக்கம் அளிக்காவிட்டாலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனே முடிவு செய்ய மாட்டேன் என கூறினார்.


ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது அமர்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை. ஜனவரி 31ம் தேதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-3ம் தேதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது” என கூறினார். இதனால், அடுத்த தொடரிலும் தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கூல் தோனி:


ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய 14 வருடங்களிலும், தோனி தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில் நடப்பு தொடருடன் சேர்த்து இதுவரை 10 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள சென்னை அணி, அதில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது. அதோடு, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகமுறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் சென்னை அணியையே சேரும்.