MI vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாரும் விதமாக இரு அணி கேப்டன்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் இந்த தொடரில் இப்படியான பரபரப்பும் எதிர்பார்பும் மிக்க போட்டியாக இரு அணிகள் மோதும் போட்டி இருக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதேபோல் 2012ஆம் ஆண்டு வரை இந்த இரு அணிகளும் மோதும்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மாறாக இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என தான் இருந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை அணி கோப்பையை வென்றது. அதுவும் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டு கோப்பையை வென்று 2013ஆம் ஆண்டும் கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் மூன்று கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை பதிவு செய்ய சென்னை அணி இறுதிப் போட்டியில் களமிறங்கியது. ஆனால் அந்த சீசனில் லீக் தொடரில் முதல் ஐந்து போட்டிகளை தோற்ற மும்பை அணி அதன் பின்னர், ரோஹித்திடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மும்பை அணி லீக் போட்டிகளை வென்றதுடன் இறுதிப்போட்டி வரை வந்து தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொண்டது.
ஒரு போட்டிக்கு முன்னர் கணிக்கப்படும் வெற்றி விகிதங்களில் இளம் கேப்டன் ரோகித்தின் திட்டம் எல்லாம், தோனியின் கேப்டன்சி முன்னர் தவிடுபொடி ஆகிவிடும் என கூறினர். ஆனால் ரோகித் தலைமையிலான மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி சென்னை அணியை ஹாட்ரிக் கோப்பையை வெல்வதை தடுத்தது மட்டுமில்லாமல், தனது முதல் கோப்பையை வென்றது. இங்கு தான் தொடங்கியது சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான பகை என்றே கூறலாம். இது இரு அணி வீரர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியிலும் காணப்படுகிறது.
அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 2015 ஆம் ஆண்டு கோப்பையை வென்றதும், 2019ஆம் ஆண்டு கோப்பையை வென்றதும் சென்னை அணிக்கு எதிராகத்தான். மேலும், மும்பை அணி 2017ஆம் ஆண்டு கோப்பையை புனே அணியை வீழ்த்தி கைப்பற்றியது. புனே அணியிலும் தோனி வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது அதில், மூன்று முறை சென்னை அணிக்கு எதிராகவும், ஒரு முறை புனே அணிக்கு எதிராகவும், ஒரு முறை டெல்லி அணிக்கு எதிராகவும் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதனால் தான் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்றால் அனைவரும் பரபரப்பில் ஆழ்ந்து விடுகின்றனர்.
இந்நிலையில், இந்த சீசனில் சென்னை அணி மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளதால், தனது சொந்த மண்ணிலும் மும்பையை வீழ்த்த வேண்டும் என சென்னை அணியும், சென்னை அணிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என மும்பை அணியும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.