ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
குஜராத் அதிரடி:
இந்தூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 119 ரன்கள் என்ற இலக்கை, நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் மற்றும் விரிதிமான் சாஹா கூட்டண்இ நல்ல அடித்தளத்தை அமைத்தது. சிறிய இலக்கை துரத்துவதை உணர்ந்து இருவருமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 6.1 ஓவரில் இந்த கூட்டணி 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 71 ரன்களை சேர்த்தது.
பாண்ட்யா மிரட்டல்:
இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் பாண்ட்யா அதிரடியாக ஆடி, துரிதமாக ரன் சேர்த்தார். மறுமுனையில் விரிதிமான் சாஹா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 13.5 ஓவர்கள் முடிவிலேயே குஜராத் அணி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து வலுவாக குஜராத் முதலிடத்தில் நீடிக்கிறது. அதோடு நடப்பு தொடரில் ராஜஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு குஜராத் அணி இந்த வெற்றியின் மூலம் பழிவாங்கியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், சாஹா 41 ரன்களும் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
டாஸ் வென்ற ராஜஸ்தான்
நடப்பு தொடரின் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் குஜராத் அணி களமிறங்கியது.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
இதையடுத்து களமறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரரான பட்லர் வெறும் 8 ரன்களில் நடையை கட்டினார். கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜெய்ஷ்வால், 14 ரன்களை சேர்த்து இருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சாம்சன் மட்டும் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினார். இருப்பினும் 20 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அஷ்வின் 2 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த பராக் 4 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சுழலில் சரிந்த ராஜஸ்தான்:
தொடர்ந்து குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஜுரெல் 9 ரன்களிலும், ஹெட்மேயர் 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சற்றே நிலைத்து நின்று ஆடிய போல்ட் 15 ரன்களை சேர்த்தார். ராஜஸ்தான் அணி இழந்த 10 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் தான் வீழ்த்தினர். குறிப்பாக 4 ஓவர்களை வீசிய ரஷித் கான், வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரை தொடர்ந்து நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குஜராத் அணிக்கான இலக்கு:
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் அணி வெறும் 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.