ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 7வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி 16வது ஐபிஎல் சீசன் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை, குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதனிடையே இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் ஒளிபரப்படுகிறது.
வெற்றி பெறும் முனைப்பில் அணிகள்
டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் கேப்டன் வார்னர் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த அணியில் பெரிய அளவில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. இதனிடையே சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.
அதேசமயம் குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் சுப்மன் கில், விருத்திமான் சஹா ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஆனால் அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது. இதனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும்
மைதானம் எப்படி?
இந்தியாவின் மிகப் பழமையான மைதானங்களில் ஒன்றாக அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரே நேரத்தில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது சற்று சிரமமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பவுண்டரி எல்லைகள் மிக அருகில் இருப்பதால் இந்த போட்டியில் நிறைய பவுண்டரிகளை எதிர்பார்க்கலாம். இங்கு முதலில் பேட் செய்யும் அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 195 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்தில் இரண்டாவது பேட் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 70 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)
டெல்லி அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ப்ராஸ் கான், ரோவ்மன் பவெல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், கலீல் அகமது, முகேஷ் குமார்
குஜராத் அணி: விருத்திமான் சஹா, ஷுப்மன் கில், மேத்யூ வேட், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் ஷங்கர், ராகுல் திவேடியா, ரஷித் கான், முகமது ஷமி, சிவம் மாவி, அல்சாரி ஜோசப்
தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் யார்?
டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை மனிஷ் பாண்டே, லலித் யாதவ், அபிஷேக் போரல் மற்றும் கமலேஷ் நாகர்கோடி ஆகியோரை தங்கள் இம்பாக்ட் வீரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜெயந்த் யாதவ், கே.எஸ்.பாரத், மோகித் சர்மா, அபினவ் மனோகர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது