ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி அதிரடி பேட்டிங்:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி அரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் சால்ட் கூட்டணி, பெங்களூரு பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசியது. இதனால், பவர்பிளேயிக்குள்ளேயே டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து, 22 ரன்கள் சேர்த்து இருந்தபோது வார்னர் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த கூட்டணி 60 ரன்களை சேர்த்தது.
சால்ட் அதிரடி:
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பில் சால்ட், 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 53 ரன்களை சேர்த்து அசத்தினார். மறுமுனையில் மிட்செல் மார்ஷும் அதிரடியாக ரன் சேர்த்தார். இதனால், 10 ஓவர்களுக்டே டெல்லி அணி 115 ரன்களை குவித்தது. தொடர்ந்து 26 ரன்கள் சேர்த்து இருந்தபோது மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த ரோஸோவும் பெங்களூருவின் பந்து வீச்சை பொளந்துகட்டினார். அதிரடியாக விளையாடி வந்த சால்ட், 45 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
டெல்லி அணி வெற்றி:
இதனால் 16.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் பெங்களூரு அணியிடம் பெற்ற தோல்விக்கு டெல்லி அணி தக்க பதிலடி கொடுத்தது. இடந்த தோல்வியால் டாப் 4-க்குள் நுழையும் பெங்களூரு அணியின் கனவும் தகர்ந்தது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி களமிறங்கியது. அதேநேரம், இந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு பெங்களூரு அணி தீவிரம் காட்டியது.
பெங்களூரு அணி அதிரடி:
இதையடுத்து களமிறங்கிய டூப்ளெசி மற்றும் கோலி கூட்டணி பெங்களூரு அணிக்கு சிறப்பான அடித்தலம் அமைத்தது. சீரான இடைவெளியில் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசியது. தொடர்ந்து 45 ரன்கள் சேர்த்து இருந்தபோது மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் டூப்ளெசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
கோலி அதிரடி:
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கோலி நிலைத்து நின்று ஆடினார். 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எட்டினார். அவருக்கு உறுதுணையாக லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணி வெறும் 29 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 55 ரன்கள் சேர்த்து இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார்.
லோம்ரோர் அதிரடி:
மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய லோம்ரோர் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது தான். இறுதிவரை ஆட்டமிழக்காத இவர் 54 ரன்களை எடுத்தார். அதேநேரம் தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் 3 பந்துகளில் 8 ரன்களை சேர்த்தார்.
டெல்லி அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது. டெல்லி அணி இந்த இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெற்றது.