ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற பெங்களூரு:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.  டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருகிறது.


பெங்களூரு அணி அதிரடி:


இதையடுத்து களமிறங்கிய டூப்ளெசி மற்றும் கோலி கூட்டணி பெங்களூரு அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தது. சீரான இடைவெளியில் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை விளாசியது. தொடர்ந்து 45 ரன்கள் சேர்த்து இருந்தபோது மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் டூப்ளெசி ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.   முதல் விக்கெட்டிற்கு இந்த கூட்டணி 82 ரன்களை குவித்தது. டூப்ளெசியை தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே ரன் ஏதும்  எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 


கோலி அதிரடி:


ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் கோலி நிலைத்து நின்று ஆடினார். 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எட்டினார்.  அவருக்கு உறுதுணையாக லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணி டெல்லி பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக மாற்றியது. இந்த கூட்டணி வெறும் 29 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 55 ரன்கள் சேர்த்து இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். 


லோம்ரோர் அதிரடி:


மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய லோம்ரோர் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது தான். இறுதிவரை ஆட்டமிழக்காத இவர் 54 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.  அதேநேரம் தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத் 3 பந்துகளில் 8 ரன்களை சேர்த்தார்.


டெல்லி அணிக்கு இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து பெங்களூரு அணி நிர்ணயித்த 182 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.