PBKS vs DC: ஐபிஎல் 2023 சீசனில் 64வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸை கேப்டன் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா தொடங்கினர். இந்த இன்னிங்ஸை தொடங்கும் போது இருவரும் தங்களது பார்ட்னர்ஷிப்பில் டெல்லி அணிக்கு வழுவான தொடக்கம் கொடுக்க முடியும் என நினைத்து இருப்பார்களா என்றால் சந்தேகம் தான். காரணம் இந்த சீசன் தொடக்கத்தில் இவர்கள் கூட்டணி ஒரு போட்டியில் கூட சரியான பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்கவில்லை. டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெறாமல் போனதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று.  இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டெல்லி அணியின் ரூஸோ 37 பந்தில் 82 ரன்கள் சேர்த்தார். 


அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு போட்டியின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழக்க, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால் பஞ்சாப் அணி தொடக்க ஓவர்களில் ரன் எடுக்க திணறியது. 50 ரன்களில் இருந்த போது  பஞ்சாப் அணியின் ப்ராப்சிம்ரன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஆனால் அதன் பின்னர், களத்துக்கு வந்த லிவிங்ஸ்டன் தாய்டேவுடன் இணைந்து பஞ்சாப் அணியை மீட்கும் வேலையில் இறங்கினர். 


ஆனால் இவர்களும் அடுத்தடுத்து கொடுத்துக்கொண்டு இருந்த கேட்ச் வாய்ப்புகளையும் ரன் - அவுட் வாய்ப்புகளையும் டெல்லி அணியினர் வீணடித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி வந்த போது தாய்டே ரிட்டேர்டு அவுட் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஷாரூக் கான் 6 ரன்னிலும் வெளியேறினர். 


அதன் பின்னர் லிவிங்ஸ்டனுடன் சாம் கரன் இணைந்தார். கடைசி மூன்று ஓவர்களில்  பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது.  போட்டியின் 18வது ஓவரில் 3 சிக்ஸர் உட்பட 20 ரன்கள் எடுத்தது. 19வது ஓவரில் முதல் பந்தில் சாம் கரன் ஒரு பவுண்டரி விளாச, அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஹர்ப்ரீத் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அந்த ஓவரில் மேற்கொண்டு ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.  தனிமனிதனாக போராடிய லிவிங்ஸ்டன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.