PBKS vs DC: ஐபிஎல் 2023 சீசனில் 64வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸை கேப்டன் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா தொடங்கினர். இந்த இன்னிங்ஸை தொடங்கும் போது இருவரும் தங்களது பார்ட்னர்ஷிப்பில் டெல்லி அணிக்கு வழுவான தொடக்கம் கொடுக்க முடியும் என நினைத்து இருப்பார்களா என்றால் சந்தேகம் தான். காரணம் இந்த சீசன் தொடக்கத்தில் இவர்கள் கூட்டணி ஒரு போட்டியில் கூட சரியான பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்கவில்லை. டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெறாமல் போனதற்கு காரணங்களில் இதுவும் ஒன்று. 


ஆனால் இன்றைய போட்டியில் இருவரும் சிறப்பான அடித்தளத்தினை டெல்லி அணிக்கு கொடுத்தனர். முதல் இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் மிரட்ட, மூன்றாவது ஓவரில் இருந்து டெல்லி அணியினர் அடித்து ஆட ஆரம்பித்தனர். இதனால் 5வது ஓவரிலேயே டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. இவர்களது அதிரடியால் டெல்லி அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. 


வாய்ப்பை தவறவிட்ட வார்னர்


10வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் கடினமான கேட்ச் வாய்ப்பினை கொடுத்தார். ஆனால் அதனை ராகுல் சஹார் தவறவிட்டார். ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவான் தவறவிடவில்லை. இதனால் வார்னர் 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  அதன் பின்னர் வந்த ரூஸோ பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸை தொடங்கினார். சிறப்பாக ஆடிவந்த ப்ரித்வி ஷா அரைசதம் எட்டிய நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 38 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் ரூஸோ ருதரதாண்டவ ஆட்டமாடிக்கொண்டு இருந்தார். இதனால் அவர் 25 பந்திலேயே தனது முதல் ஐபிஎல் அரைசதத்தினை எட்டினார். அதன் பின்னரும் தனது அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். 




இவரது விக்கெட்டை கைப்பற்ற பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் ரூஸோ 37 பந்தில் 82 ரன்கள் சேர்த்தார்.