குஜராத் - கொல்கத்தா மோதல்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் இன்று நடைபெறும் 13வது லீக் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.


நடப்பு தொடரில் புள்ளி விவரங்கள்:


நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, இரண்டிலு ம் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வென்று 6 புள்ளிகள் உடன் முதலிடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற கொல்கத்தா அணியும் ஆர்வம் காட்டி வருகிறது.


குஜராத் அணி நிலவரம்:


விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேடியா ஆகியோரால், குஜராத் அணி பேட்டிங்கில் அசுர பலத்துடன் திகழ்கிறது.  அதோடு, முகமது ஷமி, ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் எதிரணிகளை மிரட்டி வருகின்றனர். மேட்ச் வின்னர்கள் சரியான கலவையில் இருப்பது குஜராத் அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.


கொல்கத்தா அணி நிலவரம்:


கொல்கத்தா அணி இதுவரை சரியான டாப் ஆர்டரை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர்.  வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தங்கள் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுனில் நரைன்,  வருண் சக்கரவர்த்தி பெங்களூரு அணிக்கு எதிராக பிரமாதமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 


நேருக்கு நேர்:


கடந்தாண்டு நடந்த  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும், குஜராத் அணியும் முதல் முறையாக மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ரஸல் அதிகப்பட்சமாக 48 ரன்கள் விளாசினார். குஜராத் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 67 ரன்கள் குவித்தார். அதனால் அந்த தோல்விக்கு இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பழிதீர்க்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.