இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோஹித் ஷர்மாவை மும்பை அணி நீக்கக்கூடாது என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டவுல் கூறியுள்ளார். 


ரோஹித்தின் ஃபார்ம்


கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை எட்டியிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் ரோஹித் ஷர்மா படு மோசமாக ஆடி வந்தாலும், மும்பை அணி தற்போதைய நிலைமைக்கு மூன்றாமிடத்தில் வலுவாக வந்து நின்றுள்ளது. ஆரம்பத்தில் அணி பல மோசமான தோல்விகளை தழுவ, இம்முறை மும்பை அணி ஃப்ரேமிலேயே இருக்காது என்று கருதப்பட்ட நிலையில் இருந்து தற்போது கிட்டத்தட்ட பிளே-ஆஃப்ஸ் உறுதியான முதல் மூன்று அணிகளில் ஒன்றாக வந்து கம்பேக் கொடுத்துள்ளது.


அத்தனைக்கும் காரணம் அணியின் பேட்டிங் மட்டுமே. இன்னமும் அவர்களது பவுலிங் சொதப்பலாகதான் இருந்து வருகிறது. சூரியகுமார் யாதவ், கிரீன், டிம் டேவிட் ஆகியோர் ஃபார்மிற்கு திரும்பிய நிலையில் அணியின் பேட்டிங் பலமாகியுள்ளது. ஆனால் ஹிட்மேன் பேட் இன்னமும் ஹிட் செய்யாமல் இருப்பதுதான் ஒரே சோகம். 



ஆர்சிபி போட்டியில் வெற்றி


செவ்வாயன்று வான்கடே ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தாலும், அந்த போட்டியிலும் ரோஹித் ஷர்மா சோபிக்கவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரன் குவிக்க முடியாமல் ரோஹித் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல், உள்நாட்டு கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடரில் இந்திய கேப்டனின் ஃபார்ம் குறித்து ஒரு சுவாரஸ்யமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


பிரபல வர்ணனையாளரும், முன்னாள் நியூசிலந்து கிரிக்கெட் வீரரும் ஆன அவர், மும்பை அணியில் ரோஹித்தை இந்த சீசனில் வரும் போட்டிகளில் லெவன் அணியில் ஏன் வைத்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.


தொடர்புடைய செய்திகள்: CSK vs DC, Match Highlights: டெல்லி அணியின் கனவை சல்லி சல்லியாக நொறுக்கிய சென்னை... 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!


ரோஹித் அடிப்பார்


கிரிக்பஸ்ஸில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட டவுல், இந்த சீசனில் மும்பை அணியில் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து விளக்கும்போது, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனுக்கு செய்யப்பட்ட தோனியின் ட்ரீட்மென்ட் குறிப்பிட்டு பேசினார். "ஒரு வீரர் ரன்களை எடுக்காமலே அந்த அணி தொடர்ந்து வெற்றிபெறும் போது, அவர்கள் அந்த வீரரை தொடர்ந்து நம்பலாம். இதைத்தான் வாட்சனுடன் (2018 இல்) CSK செய்தது. அவர்கள் அவரை தொடரின் கடைசி ஆட்டம் வரைக் கொண்டு சென்றனர், பின்னர் அவர் இறுதிப்போட்டியில் நம்பிக்கையை பூர்த்தி செய்தார்," என்று சைமன் டவுல் கூறினார்.


"பவர்பிளேயில் இஷான் அடித்த விதம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ரோஹித்துக்கு பவர்ப்ளே வேலை செய்யவில்லை. இதே நேரத்தில் திலக் வர்மா உடல் தகுதியுடன் இருந்தால் என்ன ஆகும்? கண்டிப்பாக நேஹால் வதேராவை லெவனில் இருந்து நீக்க முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.



மூன்றாம் இடத்தில் மும்பை


ரோஹித் 8 பந்துகள் சந்தித்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார், மும்பையின் நட்சத்திர வீரர் சூரியகுமார் வான்கடேவில் RCB க்கு எதிராக ஒரு மேட்ச்-வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மீண்டும் அவருடைய சிறந்த ஃபார்முக்கு திரும்பினார். சூர்யகுமார் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல்-இல் அவரது அதிகபட்ச ஸ்கோரையும் அடித்தார். அவரது அதிரடியால் மும்பை அணி பெங்களூர் அணிக்கு எதிராக உறுதியான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் 2023 தரவரிசையில் MI மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.