சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
16வது ஐபிஎல் லீக் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற 55வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடர்ந்து சென்னை அணியின் பிளேயிங் லெவனில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர்,துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோ இடம் பெற்றிருந்தனர். இம்பேக்ட் வீரர்களாக ஷிவம் துபே, மதீஷா பதீரானா இருவரும் களம் கண்டனர்.
டெல்லி அணியில் டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இம்பேக்ட் வீரர்களாக கலீல் அகமது, மணீஷ் பாண்டே இடம் பெற்றனர்.
சென்னை அணி இன்னிங்ஸ்
சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. கடந்த சில ஆட்டங்களில் சென்னை அணி வீரர்கள் தொடர்ந்து ரன் குவித்து வந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. சென்னை அணியில் டெவன் கான்வே 10 ரன்கள், கெய்க்வாட் 24 ரன்கள், ரஹானெ 21 ரன்கள், துபே 25 ரன்கள், அம்பத்தி ராயுடு 23 ரன்கள், ஜடேஜா 21 ரன்கள், தோனி 20 ரன்கள் எடுத்தனர். எக்ஸ்ட்ரா வகையில் 15 ரன்கள் கிடைக்க அணியின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
டெல்லி அணியில் அதிகப்பட்சமாக மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மரண அடி வாங்கிய டெல்லி அணி
தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் டேவிட் வார்னர் டக் அவுட்டானார். அந்த அடியை தாண்டுவதற்குள் டெல்லி அணிக்கு அடிமேல் அடி விழுந்தது. பில் சால்ட் (17 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (5 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்படியான நிலையில் மணிஷ் பாண்டே, ரூஸோ இருவரும் மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் விளையாடினார்களே தவிர, அணியின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.
மணிஷ் பாண்டே 27 ரன்களிலும், ரூஸோ 35 ரன்களிலும் வெளியேற மீண்டும் பழைய கதையாக டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக பதீரானா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேசமயம் டெல்லி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.