சென்னையில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 


16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. கிட்டதட்ட 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுக் கட்டத்திற்கு வந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி விட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ள நிலையில் மீதமுள்ள 3 இடத்திற்கு மற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. 


இதற்கிடையில் பிளே ஆஃப் சுற்றில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறும். முதலில் இரு அணிகள் இடையே நடைபெறும் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது இரண்டாவதாக நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், முதல் போட்டியில் தோற்கும் அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு செல்லும். 


அதன்படி வரும் மே 23, 24 ஆகிய இரு தினங்களும்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக லீக் போட்டிகளின் போது டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் விற்கப்பட்டது. நேரடியாக கவுண்டர்களில் டிக்கெட்டுகள் பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருப்பதும், டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்து போவதும் தொடர்கதையாக நடந்து வந்தது.


அதேசமயம் உள்ளூர் மக்களின் உதவியுடன்  சிலர் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்நிலையில் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகள் பேடிஎம் தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை சரியாக நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.