ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே இதுவரை நடந்த போட்டிகளில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ள நிலையில், மற்ற 3 இடங்களுக்கு 7 அணிகள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளது. இந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் முக்கியம் என்பதால் எஞ்சிய அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 


இப்படியான நிலையில் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் 55வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


இதனிடையே நடப்பு சீசனில்  எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே 3 முறை வெற்றிப் பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் இம்மைதானத்தில் எடுக்கப்பட்ட சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 173 ஆகும். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  


இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த மே 8 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நள்ளிரவு முதலே கவுண்டர்களில் ரசிகர்கள் குவிந்த நிலையில், பலரும் மணிக்கணக்கின் காத்திருந்து டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும் இந்த சீசன் தோனியின் கடைசி தொடர் என தகவல் பரவிய நிலையில் சென்னை அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் மைதானம் மஞ்சள் நிறமாக மாறி விடுகிறது. மேலும் தோனிக்கு முன்னாள் களமிறங்கும் வீரர் அவுட்டாக வேண்டும், அவர் களமிறங்க வேண்டும் என்ற வேண்டுதல்களும் மறுபுறம் நடந்து வருகிறது. 


இப்படியான நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதே மைதானத்தில் மும்பையுடன் மோதிய கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


பிளேயிங் லெவன்:


சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா


டெல்லி அணி: டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா