ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 6வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 


16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏறக்குறைய அனைத்து அணிகளும் தனது முதல் போட்டியை விளையாடி விட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா  அணிகள் தங்கள் முதல் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதற்கிடையில் இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடக்கின்றது. 


சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதேசமயம் லக்னோ அணி முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இரு அணிகளும் வெற்றியை நோக்கி போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என சொல்லலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


மைதானம் எப்படி?


சென்னை அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு கடந்த மாதம் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி. இதில் 20 விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


மேலும் கடைசியாக சென்னை அணி இங்கு 2019 ஆம் ஆண்டு விளையாடியது. அப்போது விளையாடிய 7 போட்டிகளில் 6 சென்னை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி சொந்த ஊர் மைதானத்தில் களமிறங்குகிறது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 155 ரன்களாகவும், 2 இன்னிங்ஸ் ஸ்கோர் 113 ரன்களாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. டாஸ் வென்ற அணி முதலில் பேட் செய்ய வேண்டும். காரணம் போட்டி செல்ல செல்ல இந்த மைதானம் மெதுவாக இருக்கும்.


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 


சென்னை அணி: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்.எஸ்.தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்


லக்னோ அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனட்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் யார்? 


சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் ரஹானேவும், பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி ஆகியோர் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியில் ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்பா கௌதம், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரரீக் மான்கட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.


அதேசமயம் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளருக்கு கைக்கொடுக்கும் என்பதால் மிட்செல் சான்ட்னர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் கடந்த ஆட்டத்தில் பந்துவீசாத மொயீன் அலி சுழற்பந்து வீச்சில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. எது எப்படியோ சென்னை அணி தனது முதல்  வெற்றியை பெற வேண்டி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.