குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி, ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 19வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.


ஷமியின் 100வது விக்கெட்:


16வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் கெய்க்வாட் களமிறங்கினர். போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய ஷமியின் 2வது பந்தில் சென்னை அணி வீரர் கான்வே க்ளீன் போல்டானார். இது ஐபிஎல் தொடரில் ஷமி வீழ்த்திய 100வது விக்கெட்டாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்திய 19வது வீரர் எனும் பெருமையை பெற்றார். அதோடு, 94 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய 10வது வீரர் எனும் சாதனையையும் ஷமி படைத்துள்ளார்.


அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள்:


லசித் மலிங்கா - 70 இன்னிங்ஸ்


புவனேஷ் குமார் - 81 இன்னிங்ஸ்


அமித் மிஸ்ரா - 83 இன்னிங்ஸ்


ஆஷிஷ் நெஹ்ரா - 83 இன்னிங்ஸ்


சாஹல் - 84 இன்னிங்ஸ்


நரைன் - 86 இன்னிங்ஸ்


பிராவோ - 89 இன்னிங்ஸ்


பும்ரா - 89 இன்னிங்ஸ்


முகமது ஷமி - 94 இன்னிங்ஸ்


ஐபிஎல் தொடரில் ஷமி:


முகமது ஷமி கடந்த 2011ம் ஆண்டு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. அதைதொடர்ந்து 2013ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக 2 போட்டிகளில் விளையாடினார். பின்பு  2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடி சிறப்பான பங்களிப்பை அளித்தார். அதன்பிறகு நடைபெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷமி, 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார். இறுதியாக 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதியதாக இணைந்த குஜராத் அணியால், ஷமி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.  கடந்த தொடரில் குஜராத் அணி கோப்பையை வென்ற நிலையில், 16 போட்டிகளில் விளையாடிய ஷமி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கான்வே விக்கெட்டை வீழ்த்தி,  அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் 10 வீரர்களின் பட்டியலில் ஷமி இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி ஒருநாள் தொடர்களிலும் ஷமி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால், நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கான ஷமியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.