ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் மட்டும் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
131 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாஹா 5 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் 8 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றினார். அதன்பின்னர் சுப்மன் கில் மற்றும் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஜோடி சேர்ந்து குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
14 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்து. அடுத்து வந்த டேவிட் மில்லர் சுப்மன் கில் உடன் இணைந்தார். அவர் வந்தவுடன் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி ரன் தேவையை சற்று குறைத்தார். இதனால் 17 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி வெற்றி பெற வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் 18.1 ஓவர்களில் குஜராத் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
இதன்மூலம் ரோகித் சர்மாவிற்கு மிகவும் குறைவான போட்டிகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனாக 10 போட்டிகளில் ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தார். அவருக்கு பின்பு தற்போது ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக 16 போட்டிகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்