ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஷ்வால் சற்று அதிரடி காட்டினார். அவர் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தப் போது யஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சன் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் ராஜஸ்தான் அணி 8 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த படிக்கல் 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே சிறப்பாக விளையாடி வந்த பட்லர் 39 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக ராஜஸ்தான் அணி 13 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த ஹெர்ட்மேயரும் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். ரவிச்சந்திரன் அஷ்வினும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன்கள்:
2009- அனில் கும்ப்ளே(ஆர்சிபி கேப்டன்)-4/16 vs டெக்கான் சார்ஜர்ஸ் அணி
2022- ஹர்திக் பாண்ட்யா(குஜராத் டைட்டன்ஸ் கேப்டன்)- 3/17 vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
அடுத்த வந்த வீரர்களில் ரியான் பராக் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்து 16 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கேப்டனாக இரண்டாவது சிறந்த பந்துவீச்சை ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்