ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 210 ரன்கள் அடித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 149 ரன்கள் எடுத்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பந்துவீசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் தாமதாமாக பந்துவீசியது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் தாமதமாக பந்துவீசியது. இது அந்த அணியின் முதல் முறை என்பதால் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தாமதமாக பந்துவீசியது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு பிறகு நடப்புத் தொடரில் தற்போது கேன் வில்லியம்சனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்