15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது போட்டியில் ஆர்.சி.பி. அணியும், கொல்கத்தா அணியும் இன்று  நேருக்கு நேர் மோதுகின்றன. முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் கொல்கத்தா அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் பெங்களூர் அணியும் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை 30 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 13 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 17 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் இரு போட்டியில் பெங்களூர் அணியும், மூன்றில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன.


இரு அணிகளும் இதுவரை ஆடிய போட்டிகளில் அதிகபட்சமாக விராட்கோலி 774 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா அணி சார்பில் கவுதம் கம்பீர் 530 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா அணி மற்றும் பெங்களூர் அணிக்காக ஆடிய கெயில் 631 ரன்கள் எடுத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிகபட்சமாக கொல்கத்தா வீரர் சுனில் நரைன் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பெங்களூர் அணியின் யுஸ்வேந்திர சாஹல் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




தனி நபர் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் தற்போதைய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் 158 ரன்களை குவித்துள்ளார். பெங்களூர் அணி சார்பில் கிறிஸ் கெயில் 102 ரன்களை குவித்துள்ளார். முதல் போட்டியில் சென்னை அணியை 131 ரன்களுக்குள் சுருட்டிய கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக ஆடி வருகிறார்.


பெங்களூர் அணியும் கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டியது. அந்த அணியின் புதிய கேப்டன் பாப் டுப்ளிசிஸ் அதிரடி காட்டினார். 205 ரன்களை குவித்தும் அந்த அணி பந்துவீச்சு மோசமாக இருந்ததால் தோல்வியை தழுவியது. இதனால், இந்த போட்டியில் பெங்களூர் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெங்களூர் அணியில் கேப்டன் பாப்டுப்ளிசிஸ், முன்னாள் கேப்டன் விராட்கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் கடந்த போட்டியில் அசத்தியதால் இந்த போட்டியிலும் அவர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண