ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 6 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்துள்ளது.
ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஃபார்மில் உள்ளார். அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அந்த அணியும் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த இரண்டு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏற்கெனவே நடப்புத் தொடரில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசியிருந்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன்(57) மற்றும் அபிஷேக் சர்மா (42)ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே நடப்புத் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க குஜராத் டைட்டன்ஸ் காத்திருக்கும் என்று கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணி முதலிடத்தை பெறுமா அல்லது குஜராத் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்