ஐ.பி.எல். தொடரின் 25வது ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், கொல்கத்தா அணிக்காக ஆரன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக அமைய, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.
கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். சுனில் நரைன் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நிதிஷ் ராணா களத்தில் நின்று அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவரை அடுத்து களமிறங்கிய ரஸலும் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருக்கிறது கொல்கத்தா அணி.
சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை நடராஜன் 4 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜென்சன், ஜகதீஷா சுசித் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 7 போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 14 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி அதிகபட்சமாக 209 ரன்களையும், கொல்கத்தா அதிகபட்சமாக 187 ரன்களையும் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா 101 ரன்களையும், ஹைதராபாத் குறைந்தபட்சமாக 115 ரன்களையும் எடுத்துள்ளது.
இரு அணிகளிலும் அதிகபட்சமாக வார்னர் ஹைதராபாத் அணிக்காக ஆடியபோது 619 ரன்களை குவித்துள்ளார். இரு அணிகளுக்கும் நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் கொல்கத்தா 4 போட்டிகளிலும், ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்