சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அணிக்காக தற்போது வரை 190 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 116 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 73 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். மொத்தமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி 61.37 வெற்றி சதவிகிதத்தை வைத்துள்ளார்.
மேலும் சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை தோனி வென்று தந்துள்ளார். இவை தவிர ஐபிஎல் தொடரில் 9 முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செய்த சில முக்கியமான மாஸ்டர் ஸ்டோர்க் சம்பவங்கள் என்னென்ன?
2010 இறுதிப் போட்டியில் பொல்லார்டு வைத்த ஃபில்டிங்:
2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. அப்போது முதலில் ஆடிய சென்னை அணி 168 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு அசத்தலாக விளையாடினார். 18ஆவது ஓவரில் இவர் 22 ரன்கள் விளாசினார்.
அந்த சமயத்தில் பொல்லார்டு நேராக அடிப்பதை பார்த்து பந்துவீச்சாளருக்கு பின்பு நேராக ஒரு கூடுதல் ஃபில்டரை தோனி வைத்திருந்தார். அந்த ஃபீல்டரிடம் பொல்லார்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது சென்னை அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியமான நகர்த்தலாக அமைந்தது.
2011ல் கெயிலை விக்கெட்டை எடுக்க தோனியின் திட்டம்:
2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 12 போட்டிகளில் 608 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதின. அப்போது சென்னை அணி 205 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால் கிறிஸ் கெயில் களமிறங்கியும் மகேந்திர சிங் தோனி துணிச்சலாக ரவிச்சந்திரன் அஷ்வினிறு முதல் ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் கெயிலை அஷ்வின் டக் அவுட்டாக்கி அசத்தினார். தோனியின் இந்த நகர்த்தல் சென்னை அணிக்கு 2ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தது.
2018ல் ஷேன் வாட்சனை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது:
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தடைக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. அப்போது சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சனை தோனி களமிறக்கினார். அவரின் இந்த முடிவை பலரும் விமர்சனம் செய்தனர். எனினும் அதை தவிடு போடியாக்கும் விதமாக ஷேன் வாட்சனின் ஆட்டம் அமைந்தது. அந்தத் தொடரில் 15 போட்டிகளில் ஷேன் வாட்சன் 555 ரன்கள் விளாசினார். அத்துடன் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 117* ரன்கள் விளாசினார். தோனியின் இந்த மாஸ்டர் ஸ்டோர்க் ஐடியா மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கியமாக அமைந்தது.
எப்போதும் கை கொடுத்த டிஆர்.எஸ் முறை:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை போல் ஐபிஎல் தொடரிலும் எப்போதும் டிஆர் எஸ் முறை தோனிக்கு கைக்கொடுத்தது. ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு டிஆர் எஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அடுத்த முறை பயன்படுத்த முடியாது. ஆகவே அணிகள் கவனமாக இந்த முறையை பயன்படுத்தி வந்தனர். இந்த முறையை சென்னை அணியின் கேப்டனாக தோனி சிறப்பாக பயன்படுத்தினார். பல இக்கட்டான சூழல்களில் சரியாக பயன்படுத்தி எதிரணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்த காரணமாக அமைந்தார். இதன்காரணமாக டிஆர் எஸ் -ஐ தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று அழைத்து வந்தனர். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 முறை டிஆர்.எஸ் முறையை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:தல தோனினா சும்மாவா? ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிறகு ஜடேஜாவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பு...