ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தச் சூழலில் இன்று திடீரென்று சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பாக தோனியை வழிநடத்திய கேப்டன் யார்?
ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். அப்போது முதல் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் துணை கேப்டனாக இருந்தார். தோனி காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அந்தப் போட்டிகள் தவிர ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவர் கேப்டனாக இருந்துள்ளார்.
தோனியை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித்:
2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை காரணமாக இல்லை. அப்போது தோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். அப்போது அவருடைய தலைமையில் தோனி அணியில் வீரராக களமிறங்கினார். அந்த ஐபிஎல் தொடரில் புனே அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. ஆகவே அவரைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் தோனி இருக்கும் அணிக்கு கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட உள்ளார்.
தோனியை வழிநடத்திய ரெய்னா:
சென்னை அணியில் ஒரே ஒரு முறை தோனி விளையாடியும் கேப்டனாக இல்லாமல் இருந்துள்ளார். அதாவது 2012ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் யார்க்ஷேர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக இருந்தார். அந்த ஒரு முறை மட்டுமே சென்னை அணிக்கு தோனி வீரராக மட்டும் களமிறங்கியுள்ளார். அவை தவிர முதல் சீசன் முதல் 2021 வரை களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் சென்னை அணியின் கேப்டனாகவே தோனி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்