ஐபிஎல் 2022 தொடர் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஐபிஎல் தொடரில் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. பத்து போட்டிகளின் முடிவில் சென்னை,மும்பை, சன்ரைசர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் முதல் வாரத்தில் நடைபெற்ற டாப் 5 சிறந்த தருணங்கள் என்னென்ன?
ஷெல்டன் ஜாக்சன் ஸ்டெம்பிங்:
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷெல்டன் ஜாக்சன் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். குறிப்பாக சென்னை அணியின் வீரர் ராபின் உத்தப்பாவை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். அவரின் இந்த ஸ்டெம்பிங்கை பலரும் பாராட்டினர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் ஷெல்டன் ஜாக்சனை பாராட்டினார். அவருடைய மின்னல் வேக ஸ்டெம்பிங் தோனியை நினைவூட்டும் விதமாக அமைந்தது என்று கூறியிருந்தார்.
டூபிளசிக்கு அன்பை பொழிந்த சிஎஸ்கே ரசிகர்கள்:
கடந்த சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த டூபிளசிஸ் தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியின் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் ஒரு பேனரை வைத்திருந்தனர். அதில் நாங்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.. ஆனால் டூபிளசிக்காக இங்கு இருக்கிறோம் என்று கூறியிருந்தனர். இந்த பேனர் மிகவும் வைரலானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் டூபிளசில் மீது காட்டும் அன்பு வைரலானது.
பார்வையாளர் மீது பட்ட பதோனியின் சிக்சர்:
கடந்த 31ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி நிர்ணயித்த கடினமான 211 ரன்கள் என்ற இலக்கை எட்டி பிடித்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் ஆயுஷ் பதோனி அதிரடி காட்டினார். அவர் அடித்த சிக்சர் ஒன்று பார்வையாளர் பகுதியில் அமர்ந்த பெண் ஒருவரின் தலையில் பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலானது.
கேமராமேன் மீது பந்தை அடித்த திலக் வர்மா:
நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கின் போது 12ஆவது ஓவரை ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் வீசினார். அவர் வீசிய பந்தை மும்பை வீரர் திலக் வர்மா சிக்சருக்கு விரட்டினார். அப்போது அந்த பந்து களத்திற்கு வெளியே வீடியோ எடுத்து கொண்டிருந்த கேமராமேன் மீது பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
டாஸில் உளறிய ரிஷப் பண்ட்:
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். நேற்று டெல்லி அணி குஜராத் டைட்ன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் போடும் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸை வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் என்று கூறி பிறகு அதை மாற்றி பந்துவீச்சு என்று கூறினார். அவருடைய இந்த உளறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
இவ்வாறு கிரிக்கெட் திருவிழாவின் முதல் வாரத்தில் இதுபோன்ற சில தருணங்கள் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்