2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுடைய அணிக்கு வீரர்களை எடுத்துக்கொண்டனர். 


இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேக்ஸ்வேல் 2022 ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


ஏனென்றால் இவருக்கு வரும் 27-ஆம் தேதி வினி ராமன் உடன் திருமணம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக இவர் சில நாட்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க உள்ளார். ஆகவே ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 






ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடருடன் அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக அடுத்து மேக்ஸ்வேல் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் முதல் சில போட்டிகள் அவர் விளையாட மாட்டார் என்பதால் டூபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த டூபிளசிஸை பெங்களூரு அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 


விராட் கோலியுடன் சேர்ந்து டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. அத்துடன் ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக இவர் செயல்பட்டுள்ளதால் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆர்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் !