இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் விருந்தாக அமைந்து வருவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர்களில் நடத்தப்படும் முதன்மையான லீக் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. மேலும், அனைத்து அணிகளும் ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்க உள்ளது.


இருப்பினும் ரிட்டென்சன் எனப்படும் வீரர்களை தக்க வைப்பதற்கான பட்டியலை அளிப்பதற்கு ஏற்கனவே களத்தில் உள்ள 8 அணிகளுக்குமான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியும் அளித்த உத்தேச ரிட்டென்சன் பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றில் சில வீரர்கள் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியளிக்கிறது.


ரெய்னா, பாப் டுப்ளிசிஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எதிர்பார்த்தது போல, தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்காவது வீரராக ரெய்னாவா? அல்லது பாப் டுப்ளிசிசா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் மொயின் அலியை சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மோர்கன், தினேஷ் கார்த்திக் : (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)


நடப்பு ஐ.பி.எல். தொடரின் ரன்னரும், 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியுமான கொல்கத்தா அணியில் முக்கிய வீரர்கள் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் அய்யர், ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் ரிடென்சன் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் உள்ளது. ஆனால், அந்த அணியின் கேப்டன் மோர்கன், முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், அவர்கள் புதிய அணிக்கு செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


சாஹல், ஹர்ஷல் படேல் : (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)


பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நட்சத்திர வீரரும், அந்த அணியின் தூணாகிய விராட்கோலி, அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மட்டுமே பட்டியலில் உள்ளனர். டிவிலியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் இடம்பெறவில்லை. முக்கிய வீரர் ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெறவில்லை. இருப்பினும் ரிட்டென்ஷன் பட்டியலில் இவர்கள் பெயர் இடம்பெறுமா? என்பது இன்று இரவே தெரிய வரும்.


ரஷீத்கான், மணீஷ்பாண்டே, புவனேஷ்குமார் : (சன்ரைசர்ஸ் ஹைதரபாத்)


ஹைதராபாத் அணி எப்போதும் ஐ.பி.எல். வரலாற்றில் கணிக்க முடியாத அணியாக வலம் வருகிறது. அந்த அணியின் ரிட்டென்சன் உத்தேச பட்டியலில் வில்லியம்சன் மட்டுமே இடம்பெற்றுள்ளார். ஹைதராபாத்திற்கு கோப்பையை வென்றுத் தந்த வார்னர் கடந்த முறையே ஓரங்கட்டப்பட்டார். உலககோப்பையில் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ரிட்டென்ஷன் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, மணீஷ் பாண்டே, புவனேஷ்குமார், உலகின் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கான் ஆகியோர்களது பெயர்களும் இடம்பெறவில்லை.




ஷ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், அஸ்வின் ( டெல்லி கேபிடல்ஸ்)


ஐ.பி.எல். தொடரிலே மிகவும் இளம் வீரர்களை கொண்ட அணி டெல்லி கேபிடல்ஸ். அந்த அணியினர் கேப்டன் ரிஷப்பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் படேல், நோர்ட்ஜே ஆகியோரை தக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய வீரர்களான முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிரடி வீரர் ஹெட்மயர், ஆல்ரவுண்டர் அஸ்வின் பெயர் இடம்பெறவில்லை. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ( மும்பை இந்தியன்ஸ்)


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஐ.பி.எல், அணி மும்பை இந்தியன்சின் ரிடென்ஷன் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த அணியில் ப்ளேயிங் லெவனில் ஆடும் 11 பேருமே தவிர்க்க முடியாத வீரர்களாகவே வலம் வந்தனர். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் தூண்களாக வலம் வந்த ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ட்ரெண்ட் போல்ட் பெயர்கள் பட்டியலில் இல்லாதது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் இரண்டு வீரர்களை தக்க வைக்க வாய்ப்பு உள்ளதால் மேற்கண்ட வீரர்களில் யாரேனும் இருவர் இடம்பெற வாய்ப்புள்ளது.





ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த  அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே நம்பிக்கைக்குரிய வீரர். பிற வீரர்கள் யாரும் பெரியளவில் நட்சத்திர வீரர்களாக வலம் வரவில்லை. அந்த அணியினர் சஞ்சு சாம்சனை மட்டும் ரிட்டென்ஷன் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும், ராஜஸ்தான் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கடந்த மாதம் அன்பால்லோ செய்த சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாலோ செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மற்றொரு முக்கிய அணியான பஞ்சாப் அணி ரிட்டென்ஷன் வீரர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல், கெயில், மயங்க் அகர்வால், ஷாரூக்கான், முகமது ஷமி என்று நட்சத்திர வீரர்களை கொண்ட பஞ்சாப் அணி முற்றிலும் புதிய முகங்களுடன் களமிறங்க உள்ளது என்று தெரியவந்துள்ளது.