இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. இதில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடிய பல முக்கிய வீரர்கள் அதிரடியாக கழட்டிவிடப் பட்டனர்.
அந்தவகையில், 2021 ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக இருந்தது. அணியை ஒற்றை ஆளாக இத்தனை வருடம் தங்கி வந்த வார்னரின் மோசமான ஃபார்மும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து, நேற்று சன்ரைசர்ஸ் அணி மொத்தம் 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. முதல் வீரராக அந்த அணியின் கேப்டனான வில்லியம்சன் தக்க வைக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு வீரர்களாக அப்துல் சமத்தும், உம்ரான் மாலிக்கும் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், ஹைதராபாத் அணியில் தன்னை தக்கவைக்காதது குறித்து டேவிட் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சாப்டர் முடிந்தது!! இத்தனை வருடம் எனக்கு ஆதரவு மற்றும் அளவில்லா அன்பு செலுத்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஹைதராபாத் அணியின் தவிர்க்கமுடியாத சுழல் பந்துவீச்சாளராக இருந்த ரஷித் கான் தான் அணியில் தக்கவைக்க படாதது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ஹைதராபாத் அணியுடன் நான் பயணித்த பயணம் ஒரு அற்புதமான பயணம். உங்களின் ஆதரவுக்கும், அன்புக்கும், என்னை நம்பியதற்கும் நன்றி. ஆரஞ்சு ராணுவத்திற்கு ரசிகர்களாகிய நீங்கள் எனது பலத்தின் தூணாக இருந்தீர்கள், அத்தகைய அற்புதமான ரசிகர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்