ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி ஓவரில் 17 ரன்களை எடுத்து அசத்தினார். இதன்மூலம் சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் தல தோனி செய்த டாப் 5 ஃபினிஷிங் சம்பவங்கள் என்னென்ன?
Vs பஞ்சாப் (2010):
2010ஆம் ஆண்டு சென்னை-பஞ்சாப் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி சேஸ் செய்ய வேண்டிருந்தது. அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் சார்பில் இர்ஃபான் பதான் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் தோனி அசத்தலாக இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உடன் போட்டியை வென்று அசத்தினார்.
Vs சன்ரைசர்ஸ் (2013):
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை-சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் தோனி 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தை ஒரு வைடு வீசி பின்னர் அடுத்த பந்தை ஆஷிஷ் ரெட்டி சிறப்பாக டாட் பாலாக மாற்றினார். இதனால் அடுத்த 5 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் தோனி இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி சென்னையை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Vs ஆர்சிபி (2018):
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் திரும்பி வந்தது. அந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 9 ஓவர்களில் 75 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. அப்போது களத்திற்கு தோனி வந்தார். சென்னை அணி வெற்றி பெற 64 பந்துகளில் 131 ரன்கள் தேவைப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தோனி 34 பந்துகளில் 70* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். சென்னை அணி 19.3 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Vs டெல்லி (2021):
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை- டெல்லி அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் மோதின. அந்தப் போட்டியில் டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தோனி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. அதை தல தோனி சிறப்பாக அடித்து சென்னை அணியை 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று அசத்தினார்.
Vs மும்பை (2022):
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த தோனி ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் விளாசி சென்னை அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் கடைசி ஓவர்களில் ஃபினிஷிங் செய்வதில் எப்போதும் கிங் என்பதை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்