மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 198 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை தொடக்க வீரர் ரோகித் சர்மாவும், இஷான்கிஷானும் 32 ரன்களுக்குள் ஆட்டமிழந்த நிலையில் திலக் வர்மாவும், டேவல்ட் ப்ரெவிசும் ஜோடி சேர்ந்தனர். குறிப்பாக, இளம் வீரர் ப்ரெவிஸ் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினர்.




குறிப்பாக, 9வது ஓவரை வீசிய ராகுல் சஹாருக்கு அது மறக்கப்பட வேண்டிய ஓவராக அமைந்தது. அந்த ஓவரின் 2வது பந்திற்கு ஸ்ட்ரைக்கிற்கு வந்த ப்ரெவிஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். நான்காவது பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தையும் ஹாட்ரிக் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ராகுல் சஹார் வீசிய கடைசி பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை குவித்தார். இதனால், மும்பையின் ரன் வேகமும் மளமளவென உயர்ந்தது.




கடைசியில் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த ப்ரெவிஸ் ஓடீன் ஸ்மித் பந்தில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு சூர்யகுமார் யாதவ் இறங்கினார். சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்தபோது சூர்யகுமார் யாதவ் அடித்த பந்திற்கு ஒரு ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடிய திலக் வர்மா மீண்டும் கிரீசுக்குள் வருவதற்கு முன்பே ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


பின்னர், சூர்யகுமார் யாதவ் – பொல்லார்ட் ஜோடி சேர்ந்தனர். அப்போது, 6 ஓவர்களில் 60 ரன்களுக்கு அதிகமாக மும்பை வெற்றிக்கு தேவைப்பட்டது. 16 ஓவர்கள் முடிவில் மும்பை 150 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் சூர்யகுமார் யாதவும், பொல்லார்டும் இருந்ததால் ஆட்டம் பரபரப்பாகவே இருந்தது. ஆனால், வைபவ் அரோரா வீசிய 17வது ஓவரில் பொல்லார்ட் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது தேவையில்லாத ரன் அவுட்டானார். இதனால், மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.




அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் அதே ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்தார்.  இதனால், 18 பந்துகளில் 33 ரன்கள் மும்பை வெற்றிக்கு தேவைப்பட்டது. 18வது ஓவரை அர்ஷ்தீப்சிங் கட்டுக்கோப்பாக வீசினார். இதனால், கடைசி 12 பந்துகளில் 28 ரன்கள் மும்பை வெற்றிக்கு தேவைப்பட்டது. ரபாடா வீசிய 19வது ஓவரில் முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்தார். ஆனால், அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். இதனால், மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


ஓடீன் ஸ்மித் வீசிய கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை உனத்கட் சிக்ஸருக்கு அனுப்பினார். இதனால். 5 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தில் உனத்கட் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். உனத்கட் 7 பந்தில் 12 ரன்களுடன் வெளியேறினார். 4வது பந்தில் பும்ரா அவுட்டானார். இதனால், கடைசி 2 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை டாட் ஆக வீசி பஞ்சாப் வெற்றியை உறுதி செய்தார் ஓடீன் ஸ்மித்.




கடைசி பந்திலும் ஓடீன் ஸ்மித் விக்கெட் வீழ்த்தினார். இதனால், மும்பை அணியை பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 5 போட்டிகளில் ஆடிய மும்பை பெறும் 5வது தோல்வி இதுவாகும்.  பஞ்சாப் அணியின் ஓடீன் ஸ்மித் 3 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 3 வெற்றிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறினார். மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் ஆடி 5லும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண