ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பை வான்கடேவில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் இந்த தொடரின் தொடக்கத்தில் வலுவாக இருந்தாலும் கடைசியாக ஆடிய போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வியை சந்தித்து வருகின்றன.
டெல்லி அணி இளம் அணியாக இருந்தாலும் கடந்த சில போட்டிகளில் அவர்களது திறமை முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை என்றே கூற வேண்டும். டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்விஷா மற்றும் டேவிட் வார்னர் அதிரடி தொடக்கத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். சர்பாஸ் கான் ஒன்டவுனில் அதிரடியாக ஆடினால் அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும். டெல்லி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த போட்டியில் அதிரடியை காட்டினால் நிச்சயம் நெருக்கடி ஏற்படும்.
ஆல்ரவுண்டர்களான லலித்யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரோவ்மென் பாவெல் இந்த போட்டியிலும் அதிரடி காட்டினால் நிச்சயம் டெல்லி மிகப்பெரிய ஸ்கோர் எட்டும். சுழலில் குல்தீப் யாதவ் அசத்தினால் டெல்லிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் ஆரோன் பிஞ்சுடன் வெங்கடேஷ் அய்யர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அதிரடியை இந்த ஆட்டத்தில் தொடர வேண்டியது அவசியம். நிதிஷ் ராணா, ரிங்கு சிங்கும் அதிரடியாக ஆடினால் கொல்கத்தா அணிக்கு ரன் எகிறும்.
சுனில் நரேன் சுழலில் மட்டுமின்றி பேட்டிங்கில் அசத்த வாய்ப்புள்ளது. பாட்கம்மின்சிடம் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். வருண் சக்கரவர்த்தி சுழலில் அசத்தினால் டெல்லிக்கு நெருக்கடி அதிகரிக்கும். உமேஷ் யாதவ் நிச்சயம் வேகத்தில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கு ஷிவம் மாவி ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்புள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 31 போட்டிகள் நடைபெற்றுள்ளது. கொல்கத்தா அணி 16 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லிக்காக அதிகபட்சமாக ஷிகர்தவான் 810 ரன்களையும், கொல்கத்தா அணிக்காக கவுதம் கம்பீர் 413 ரன்களையும் குவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்