ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர். 


 


இந்நிலையில் லக்னோ அணியின் பெயரை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. இது அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 








முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கே.எல்.ராகுல், ரவி பிஷ்னாய் மற்றும் மார்கஸ் ஸ்டையோனிஸ் ஆகிய மூன்று பேரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்தது. கே.எல்.ராகுலை 17 கோடி ரூபாய்க்கும், ஸ்டையோனிஸை 9 கோடி ரூபாய்க்கும், ரவி பிஷ்னாயை 4 கோடி ரூபாய்க்கும் அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அந்த அணியின் பயிற்சியாளராக ஏற்கெனவே ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடன் துணை பயிற்சியாளராக விஜய் தஹியாவும் நியமிக்கப்பட்டிருந்தார். இவர்களுடன் சேர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


 






அதேபோல் மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணி இன்னும் தன்னுடைய பெயரை வெளியிடாமல் உள்ளது. அந்த அணி சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா(15 கோடி), ரஷீத் கான்(15 கோடி), சுப்மன் கில்(8 கோடி) ஆகியோரை ஒப்பந்தம் செய்தது. அத்துடன் அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டின் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது லக்னோ அணி தன்னுடைய பெயர் வெளியிட்ட சூழல் விரைவில் அகமதாபாத் அணியும் தன்னுடைய பெயரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: ஒரே வீடியோவில் வாழ்க்கை தத்துவத்தை சொன்ன தோனி..நெகிழ்ந்துபோன சேவாக் - வீடியோ!!