ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். அவருடைய சிறப்பான சதத்தால் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. 


 நேற்றைய போட்டியில் சதம் கடந்ததன் மூலம் ஜோஸ் பட்லர் நடப்புத் தொடரில் 4ஆவது சதத்தை பதிவு செய்து 824 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும், ஆரஞ்சு கோப்பையை தன் வசமாகியுள்ளார். 


இந்நிலையில், நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் சிக்சர் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றிப்பெற செய்தார். அப்பொழுது, ஆடியன்ஸ் அமரும் இடத்தில் இரண்டு பெண்கள் ராஜஸ்தான் அணி ஜெர்சி அணிந்து துள்ளி குதித்தனர். அதில், ஒரு பெண் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தன்ஸ்ரீ வர்மா என்பது அனைவருக்கும் தெரியும். மற்றொரு பெண் ஒருவேளை பட்லரின் மனைவி என்று பலரும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். அப்போது, கிண்டலாக பேசிய வேன் டெர் டுஷன் மனைவி லாரா ‘நான் பட்லரை 2வது கணவராக தத்தெடுத்துவிட்டேன்’ என பேசினார். தற்போது அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. 


பட்லர் விளையாடும் அதே ராஜஸ்தான் அணியில்தான் வேன் டெர் டுஷன் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய டுஷன் பார்ம் அவுட் காரணமாக உட்கார வைக்கப்பட்டார். 






இதுகுறித்து விளக்கமளித்த லாரா, "நான் பட்லரின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை கேமராவில் தெரிந்ததால் ரசிகர்கள் என்னை அவரது மனைவி என்று நினைத்து விட்டார்கள் போல. மேலும் தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிகுதிக்கிறோம். எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது.


பட்லரின் மனைவி பெயர் லூசி. நான் அவரை பார்த்தது கூட இல்லை. என் கணவர் டுசன் சில காரணங்களால் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதில் பட்லர் அடித்தபோது உற்சாகத்தில் துள்ளினேன். இந்த சீசனில் நான் பட்லரை இரண்டாவது கணவராக தத்தெடுத்துவிட்டேன்" என்று ஜாலியாக பேசியுள்ளார்.