இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.


இதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கும் லக்னோ அணி, இன்று நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரஷித் கான் ஆகியோரை வாங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 






இதையடுத்து புதிய லக்னோ அணி,பஞ்சாப் கிங்ஸை விட்டு வெளியேற இருக்கும் கே.எல் ராகுலுக்கு ரூ. 20 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது, அதேபோல், ரஷித் கானை தங்கள் பக்கம் வரவைக்க ரூ.16 கோடி வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஹைதாபாத் அணிஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரைத் தக்க வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் ரூ. 12 கோடிக்கு மேல் அவரை தக்கவைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. 


தற்போது ரஷித் கானுக்கு 9 கோடியும், ராகுலுக்கு 11 கோடியும் முன்தொகையாக வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளனர். அதில், கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கானை ஏலம் நடப்பதற்கு முன்பே எங்கள் அணியிலிருந்து விலகி புதிய லக்னோ அணிக்கு சென்றதாக புகார் அளித்துள்ளனர்.


இதுதொடர்பாக பிசிசிஐயின் முக்கிய தலைவர் தெரிவிக்கையில், இதுகுறித்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை, ஆனால் லக்னோ அணி வீரர்களை வாங்குவதாக இரண்டு அணி உரிமையாளர்களிடமிருந்து வாய்மொழியாக புகார் வந்துள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம். சமநிலையை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. கடுமையான போட்டி இருக்கும் போது இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 


 


இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், டி20 தொடரின் நெறிமுறைகளை மீறியதற்காக கே.எல். ராகுல் மற்றும் ரஷீத்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கடந்த 2010 இல், ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பந்தத்தில் இருந்தபோது மற்ற உரிமையாளர்களுடன் தொடர்பில் இருந்ததால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண