ஐ.பி.எல். தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் லக்னோவும், பிரம்மாண்ட வெற்றி பெற்று ப்ளே ஆப் ரேசில் நிற்க வேண்டும் என்று கொல்கத்தாவும் மோதினர்.




டாஸ் வென்ற கே.எல்.ராகுல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கே.எல்.ராகுல் நிதானமாக ஆட்டத்தை தொடங்க, டி காக் அதிரடியாக ஆடினார். இதனால், 6வது ஓவரிலே வருண் சக்கரவர்த்தியை ஸ்ரேயாஸ் பயன்படுத்தினார். 7.2 ஓவர்களில் லக்னோ 50 ரன்களை கடந்தது. டிம் சவுதி வீசிய 10வது ஓவரில் ராகுல் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். இதனால், லக்னோ 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் விளாசியது. சிறப்பாக ஆடிய டி காக் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். லக்னோ அணி 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.


தொடர்ந்து குயின்டின் டி காக்கும், கே.எல்.ராகுலும் அதிரடியில் மிரட்டினர். இவர்களை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். உமேஷ் யாதவ், சவுதீ, வருண் சக்கரவர்த்தி, ரஸல், சுனில் நரைன், நிதிஷ் ராணா என யார் வீசினாலும் இருவரும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினர். தொடர்ந்து அதிரடி காட்டிய டி காக் 59 பந்துகளில் அபார சதம் அடித்தார்.




அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த கே.எல்.ராகுலும் சிக்ஸர்களை விளாசினார். டிம் சவுதி வீசிய 19வது ஓவரில் மட்டும் கே.எல்.ராகுல் 1 சிக்ஸரையும், டி காக் 3 சிக்ஸர்களையும் விளாசினர். அந்த ஓவரில் இருவரும் 189 ரன்களை எட்டியபோது ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள எடுத்த ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தனர். 20 ஓவரில் லக்னோ 200 ரன்களை கடந்தது. ரஸலின் கடைசி ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் லக்னோ 210 ரன்களை விளாசினர்.


டி காக் 70 பந்துகளில் 10 பவுண்டரி 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டி காக் 12 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கொல்கத்தா வீரர் கோட்டை விட்டதற்கு டி காக் ருத்ரதாண்டவம் ஆடியது கொல்கத்தா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.