பெங்களூரு உடனான குவாலிஃபையர் போட்டியில் வெற்றிபெற்ற உடன் அணியின் டாப் வீரர் ஜோஸ் பட்லரும், சஞ்சு சாம்சனும் சஹால் போல தரையில் படுத்துக்கொண்டு பேசிய விடியோ ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி உள்ளது.
பெங்களூரு சொதப்பல்
ஐபிஎல் 2022 தொடரில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு விராட் கோலி 7 (8) ரன்களில் அவுட்டாக அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மெதுவாக பேட்டிங் செய்து 25 (27) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் அட்டகாசமான சதமடித்து காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிதார் இம்முறையும் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிகபட்சமாக 58 (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் வெற்றி
அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியாக 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) ரன்களிலும் தேவ்தத் படிக்கல் 9 (12) ரன்களிலும் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பெங்களூரு பவுலர்களை பிரித்து மேய்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் சரவெடியாக 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவர்களிலேயே 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் குஜராத்தை மீண்டும் சந்தித்து கோப்பைக்காக போராட தயாராகியுள்ளது.
போட்டிக்கு பிறகு
வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் சிம்மாசனமிட்டு அமர்ந்த ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரரும், பைனலுக்கு வருவதற்கான முக்கிய காரணமும் ஆன ஜோஸ் பட்லரும் அணியின் கேப்டன் ஆன, சஞ்சு சாம்சனும் போட்டிக்கு பிறகு எந்த கவலையும் இன்றி சாவகாசமாக ஒரு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் இருவரும் அவர்களது அணியின் முக்கிய ஸ்பின்னரான சஹாலுடைய பிரபல போஸில் படுத்துக்கொண்டே பேசினார்கள்.
சஹால் அடையாளம்
சஹால் ஒருமுறை பெஞ்சில் விளையாடமால் இருந்த போது தரையில் படுத்திருந்து போட்டியை கண்டு கொண்டிருந்தார். அந்த புகைப்படம் அவரது மோசமான ஃபார்மின் போது வைரல் ஆனது. அதன் பிறகு ஒரு போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட் வீழ்த்திய பிறகு அதே போல படுத்து காண்பித்து அதனை கொண்டாடினார். அதன் பிறகு அதுவே அவரது அடையாளமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இருவரும் பேசிக்கொண்டது
சஹால் போல படுத்துக்கொண்டு பேசியபோது, "எப்படி ஃபீல் பண்றீங்க ஜோஸ் பாய்" என்று சாம்சன் கேட்க, "கண்டிப்பாக ரொம்ப சிறப்பான விஷயம். நாங்க ஏன் இப்படி படுத்துகிட்டு பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கே தெரியும். இங்கே இருப்பது மிகவும் ஸ்பெஷலானது, இந்த கூட்டம், இந்த போட்டி, இதில் டாஸ் வென்றது மிகவும் முக்கியமான ஒன்றாகும்." என்று பட்லர் கூற, தொடர்ந்த சஞ்சு சாம்சன், "இந்த தொடர் தொடங்கியது முதலே என் மனதில் இருந்தது அதுதான். ஷேன் வார்னேவுக்காக இந்த கோப்பையை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இப்போது பைனல் வரை வந்திருப்பது மிகவும் சிறப்பான விஷயம். இன்னும் ஒரு படி செல்ல வேண்டி உள்ளது, அதற்கு முன் நான் அதுகுறித்து பெரிதாக பேச விரும்பவில்லை." என்று கூறினார்.