ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். அவருடைய சிறப்பான சதத்தால் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதம் கடந்ததன் மூலம் ஜோஸ் பட்லர் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் இதன்மூலம் ஒரே அணிக்காக 5 சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றுள்ளார். இந்தச் சாதனையை அவர் விராட் கோலியுடன் பகிர்ந்துள்ளார். விராட் கோலி பெங்களூரு அணிக்காக 5 சதங்களை அடித்துள்ளார். அத்துடன் நடப்புத் தொடரில் 4ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையையும் பட்லர் சமன் செய்துள்ளர். இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 4 சதங்கள் கடந்து அசத்தியிருந்தார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தை அவர் விராட் கோலியுடன் இணைந்து பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள்:
கிறிஸ் கெயில்-6
ஜோஸ் பட்லர்-5
விராட் கோலி-5
கே.எல்.ராகுல்-4
டேவிட் வார்னர்-4
இவைதவிர ஐபிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் 800 ரன்களுக்கு மேல் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பட்லர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 800 ரன்களை கடந்து இருந்தனர்.
ஒரே ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
2016-விராட் கோலி- 973 ரன்கள்
2016-டேவிட் வார்னர்-848 ரன்கள்
2022-ஜோஸ் பட்லர்-824* ரன்கள்
2018-கேன் வில்லியம்சன் -735 ரன்கள்
2012-கிறிஸ் கெயில் - 733 ரன்கள்
நடப்புத் தொடரில் ஜேஸ் பட்லருக்கு இன்னும் ஒரே போட்டி எஞ்சியுள்ள நிலையில் அவர் டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பார் என்று கருதப்படுகிறது. அதற்கு அவருக்கும் இன்னும் 24 ரன்களே தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்